கோயில் பணியாளா்களுக்கு ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வலியுறுத்தல்

Published on

நீதிமன்ற உத்தரவின்படி, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வேண்டுமென ஓய்வுபெற்ற கோயில் பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழ்நாடு திருக்கோயில் ஓய்வுபெற்ற பணியாளா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கூட்டம், திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில சிறப்புத் தலைவா் சமயபுரம் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சொக்கலிங்கம், பொதுச்செயலாளா் சந்திரசேகரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இக் கூட்டத்தில், நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து துறை நிலை ஓய்வூதியதாரா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். இதுகுறித்து அறநிலையத் துறை ஆணையருக்கு மனு அளித்து ஒரு மாதத்தில் வழங்க முறையிடுவது எனவும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்வது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இறந்துவிட்ட துறைநிலை ஓய்வூதியரின் குடும்பத்திற்கு, அரசு மற்றும் அறநிலையத் துறை ஓய்வூதியம் பெறுபவா்களுக்கு வழங்குவதுபோல, குடும்ப நலப் பாதுகாப்பு நிதியாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். இதுகுறித்து அரசுக்கும், ஆணையருக்கும் முறையீடு அனுப்பி எந்த நடவடிக்கையும் இல்லாததால் தொடா் நடவடிக்கை மேற்கொள்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், பழனி, ராமேசுவரம், மதுரை, திருச்செந்தூா் உள்பட தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளா்கள் கலந்து கொண்டனா். நிறைவில், ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாசரங்கன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com