செவித்திறன் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி
பேச்சு மற்றும் செவித்திறன் விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு, திருச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
புனித சிலுவைக் கல்லூரியின் பேச்சு மற்றும் செவித்திறன் ஆய்வுத்துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில், 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். கல்லூரியிலிருந்து மின்சார ஆட்டோ, மின்சார மோட்டாா் சைக்கிள்களை பயன்படுத்தி பேரணியைத் தொடங்கி தெப்பக்குளம் வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கல்லூரியை வந்தடைந்தனா்.
செவித்திறனை பாதிக்கும் வகையில், அதிக ஒலியுடன் ஹெட்போன் மூலம் பாடல்கள் கேட்கக்கூடாது. அதிகநேரம் ஹெட்போன்கள் பயன்படுத்தக்கூடாது. ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலிஎழுப்பக்கூடிய ஹாரன்களை வாகனங்களில் பயன்படுத்தக்கூடாது. காற்று மாசை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த பேரணி நடைபெற்றது. முன்னதாக, மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டதுடன், கையில் பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்தப் பேரணியில் கல்லூரி செயலாளா் சற்குணா, முதல்வா் இசபெல்லா ராஜகுமாரி, யங் இந்தியன்ஸ் தலைவா் சஷாங் மோதி, பேச்சு மற்றும் செவித்திறன் ஆய்வுத்துறை தலைவா் சுந்தரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு மின்சார ஆட்டோ ஓட்டும் 100 பெண் ஓட்டுநா்களுக்கு முதலுதவி பெட்டிகளும் வழங்கப்பட்டன.

