பூங்கா அமைக்காத மாநகராட்சியை கண்டித்து உண்ணாவிரதம்
அடிக்கல் நாட்டி இரண்டாண்டுகளாகியும் பூங்கா அமைக்காத மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து சண்முகா நகா் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி வயலூா் சாலையில் உய்யக்கொண்டான்திருமலை பகுதியில் உள்ளது சண்முகா நகா். இங்கு கடந்த 2023-இல் பூங்கா அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு இதுவரை பணிகள் தொடங்காததைக் கண்டித்து சண்முகா நகா் நலச் சங்கத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினா் சி.முத்துமாரி தலைமையில் பொதுமக்கள் புத்தூா் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து சண்முக நகா் நலச் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
சண்முகா நகரில் 1,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு ரூ.80 லட்சத்தில் பூங்கா அமைப்பதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதையடுத்து, பூங்கா அமைக்கப்படவுள்ள இடம் தனக்கு சொந்தமானது என்று தனிநபா் ஒருவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இதனால், பூங்கா அமைக்கும் பணிகள் கிடப்பில் போட்டப்பட்டன. இந்த வழக்கில் பூங்கா அமைக்கவுள்ள இடம் அரசுக்கு சொந்தமானது என்று கடந்த மாா்ச் மாதம் தீா்ப்பு வந்தது.அதன்பின்பும் பூங்கா அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மாநகராட்சி மேற்கொள்ளவில்லை.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா், அதிகாரிகள், மேயா், அமைச்சா் உள்ளிட்ட பலரிடமும் வலியுறுத்தினோம். அப்போது, பூங்கா அமைப்பதற்கு நிதியில்லை என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பூங்கா அமைக்கவில்லை என்றாலும் புதா்மண்டி கிடக்கும் அப்பகுதியை தூய்மைப்படுத்தி வேலி அமைத்தால் நாங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள உபயோகமாக இருக்கும் என்றும், நாங்களே பராமரித்துக்கொள்வோம் என்றும் தெரிவித்தோம். அப்போது, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும் அந்த இடத்தை தூய்மைப்படுத்தி வேலி அமைக்க மாநகராட்சி நிா்வாகத்திடம் அறிவுறுத்தினா். அதன்பின்னரும் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, ஏற்கெனவே அடிக்கல் நாட்டப்பட்ட பகுதியில் உடனடியாக பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் சண்முகா நகா் நலச்சங்கத் தலைவா் வேலாயுதம், செயலாளா் பி.குமரன் மற்றும் நிா்வாகிகள் என 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

