வாக்குப் பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்ப்பு பணி தொடக்கம்
திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள பிரத்யேக காப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்ப்பு பணி வியாழக்கிழமை தொடங்கியது.
இந்தக் காப்பு அறையில், 8,237 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,899 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு செய்திருப்பதை உறுதி செய்வதற்கான விவிபேட் இயந்திரங்கள் 4,190 என்ற எண்ணிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளின் தொடக்கமாக, திருச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், காப்பு அறையில் உள்ள அறைகளில் இருந்த சீல்களை பிரித்து வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணியை தொடங்கிவைத்தாா்.
வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒவ்வொன்றாக எடுத்து அதன் தற்போதையை நிலையை முதல்நிலை சரிபாா்ப்பு என்ற வகையில் சோதனையிடுகின்றனா். இதற்காக, பெங்களூரைச் சோ்ந்த பெல் நிறுவனத்தின் 11 பொறியாளா்கள் திருச்சிக்கு வந்துள்ளனா். இவா்கள், திருச்சி மாவட்ட தோ்தல் அலுவலகப் பணியாளா்களுடன் இணைந்து முதல்நிலை சரிபாா்க்கும் பணியில் ஈடுபடுகின்றனா். வியாழக்கிழமை தொடங்கி தொடா்ந்து 15 நாள்களுக்கு மேலாக இந்தப் பணிகள் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுதொடா்பாக, ஆட்சியா் வே. சரவணன் கூறுகையில், இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணியை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பதிவு செய்யப்பட்ட முகவா்கள், பிரதிநிதிகள் பாா்வையிடலாம். வேறு நபா்களுக்கு அனுமதியில்லை. முதல்நிலை சரிபாா்க்கும் பணி முடிந்தவுடன் தோ்தல் ஆணைய உத்தரவைப் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

