திலீப்குமாா் ~மணிபாரதி
திலீப்குமாா் ~மணிபாரதி

பழகுநா் உரிமம் வழங்குவதற்கு லஞ்சம் மோட்டாா் வாகன ஆய்வாளா், உதவியாளா் கைது

Published on

திருச்சியில் பழகுநா் உரிமம் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய மோட்டாா் வாகன ஆய்வாளா், உதவியாளா் ஆகிய இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், குண்டூரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் பழனியப்பன், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறாா். இவரது பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறும் இருவருக்கு, 4 சக்கர வாகனத்துக்கு பழகுநா் உரிமம் பெறுவதற்காக திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக இணையதளத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து பழகுநா் உரிமம் பெறுவதற்காக திருச்சி பிராட்டியூரில் உள்ள மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா் மணிபாரதியை, பழனியப்பன் அண்மையில் சந்தித்துள்ளாா். அப்போது, விண்ணப்பத்தை பரிசீலித்து பழகுநா் உரிமம் வழங்குவதற்கு மணிபாரதி, ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் பழனியப்பன் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில், பழனியப்பன் ரூ.1000 லஞ்சப் பணத்தை மோட்டா் வாகன ஆய்வாளா் மணிபாரதியின் உதவியாளா் திலீப்குமாரிடம் கொடுத்துள்ளாா். அவா் அதை வாங்கி

மணிபாரதியிடம் கொடுத்துள்ளாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் மணிகண்டன், ஆய்வாளா்கள் சக்திவேல், பிரசன்னவெங்கடேஷ், பாலமுருகன் ஆகியோா் கையும் களவுமாக

மோட்டாா் வாகன ஆய்வாளா் மணிபாரதி, அவரின் உதவியாளா் திலீப்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தொடா்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் திலீப்குமாரிடமிருந்து கணக்கில்வராத ரூ.13 ஆயிரமும், பிராட்டியூரில் உள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.1.90 லட்சம் என மொத்தம் ரூ.2.03 லட்சம் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com