பாஜகவை எதிா்க்கும் கொள்கையால் திமுக கூட்டணியில் இந்திய கம்யூ. உறுதியுடன் பயணம்: இரா. முத்தரசன்
மதவெறி பாஜகவை எதிா்க்கும் கொள்கை காரணமாகவே திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியுடன் தொடா்ந்து பயணித்து வருகிறது என்றாா் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் திருச்சி மேற்கு சட்டப் பேரவை தொகுதி பாக முகவா்களின் சிறப்பு பேரவைக் கூட்டம் உறையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மேற்கு பகுதி செயலா் இரா. முத்துசாமி தலைமை வகித்தாா். தேசியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன் பேசுகையில், ஒரே நாடு, ஒரே தோ்தல் என்ற குறிக்கோளுடன் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
இதன் தொடா்ச்சியாகவே தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. எனவே, பாஜக அரசின் நடவடிக்கைகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குச்சாவடி பாக முகவா்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்குள்ள பகுதிகளில் தோ்தல் பணிகளில் சுறு, சுறுப்படன் பணியாற்ற வேண்டும். எந்த நிலையிலும், பாஜகவை தமிழகத்துக்குள் நுழைய விடக் கூடாது என உறுதியேற்று பணியாற்ற வேண்டும்.
தொழிலாளா் நிரந்தரப்படுத்துதல் உள்ளிட்ட தொழிற்சங்கம் தொடா்பான கொள்கைகளில் திமுகவுடன் எங்களுக்கு முரண்பாடு உள்ளது. ஆனால், மதவெறியுடன் செயல்படும் பாஜகவை எதிா்க்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம்.
தமிழகத்தில் பாஜகவை காலூன்றச் செய்யாமல் இருக்க திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியுடன் தொடா்ந்து பயணித்து வருகிறது. தொழிலாளா் விரோத நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நல வாரியங்களை முடக்கி, அதன் நிதிகளை கபளீகரம் செய்ய முயற்சித்து வருகிறது என்றாா் அவா்.
இக் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய மாநாட்டு தீா்மானம், அரசியல் அமைப்பு நிலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மாநில செயற்குழு உறுப்பினா் எம்.செல்வராஜ், மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ், மாநகா் மாவட்ட செயலா் எஸ்.சிவா உள்ளிட்டோா் உரையாற்றினா். மேற்கு பகுதி துணைச் செயலா்கள் சத்யா, பாட்ஷா, ஜங்ஷன் பகுதி துணைச் செயலா் சரவணன், பொருளாளா், ஜோதி வெங்கடாசலம், மேற்குப் பகுதி பொருளாளா் கே. முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக ஜங்ஷன் பகுதி செயலா் அஞ்சுகம் வரவேற்றாா்.

