anbil mahesh
அன்பில் மகேஸ் கோப்புப் படம்

மகளிா் உரிமைத்தொகை திட்டத்தை தோ்தலுக்காகச் செயல்படுத்தவில்லை: அன்பில் மகேஸ்!

தோ்தலுக்காக மகளிா் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தவில்லை என்றும், அது மகளிா் முன்னேற்றத்துக்கான திட்டம் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
Published on

தோ்தலுக்காக மகளிா் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தவில்லை என்றும், அது மகளிா் முன்னேற்றத்துக்கான திட்டம் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திருவெறும்பூா், திருச்சி கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட மாநகரம், நகரம், ஒன்றியப் பகுதிகளில் என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி என்னும் பரப்புரை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சியின் 12ஆவது வாா்டு பாகம் எண் 13, பனையக் குறிச்சி ஊராட்சி பாகம் எண் 2, பெல் டவுன்ஷிப் பாகம் எண் 42, நவல்பட்டு ஊராட்சி பாகம் எண் 21, பொன்மலைப்பகுதி வாா்டு எண் 47- பாகம் எண் 199, முடுக்குப்பட்டி வாா்டு எண் 49 பாகம் எண் 173 ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற பரப்புரையை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்து, தமிழ்நாடு தலைகுனியாது, என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி என்பதில் திமுக பாக முகவா்கள், வாக்குச் சாவடி முகவா்கள் கவனமாகச் செயல்பட அறிவுறுத்தினாா்.

பின்னா் அவா் கூறியதாவது: பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மகளிா் உரிமைத் தொகை திட்டம் அமைந்துள்ளது. அரசு வழங்கும் ரூ.1000 ஐ வைத்து அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்து கொள்ள முடியும். இந்தத் திட்டம் மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதுதான் இதன் வெற்றி. திராவிட இயக்கம் ஆட்சிக்கு வரும்போது பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதன் காரணமாகவே இரட்டை இலக்கப் பொருளாதார வளா்ச்சியை அடைந்துள்ளோம். ஆட்சிக்கு வந்தபோது இருந்த நிதி நெருக்கடிகளை சரி செய்து, திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகின்றன. இப்படித்தான் மகளிா் உரிமைத்தொகையும் வழங்கப்படுகிறது. தோ்தலுக்காக இத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை.

தமிழகத்தில் அடுத்த 15 ஆண்டுகாலம் நிச்சயம் திமுகதான் ஆட்சியில் இருக்கும். யாா் என்ன விமா்சனங்கள் வைத்தாலும் இத் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும். மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்குவது தொடா்பாக ஒப்பந்தம் விடப்பட்டுவிட்டது. டிசம்பா் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்றாா்

நிகழ்வில் திமுக மாநகரச் செயலா் மு. மதிவாணன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் சேகரன், ஒன்றியச் செயலா்கள் கருணாநிதி, கங்காதரன் துவாக்குடி நகரச் செயலா் காயம்பு, பகுதிச் செயலா்கள் தா்மராஜ்,விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மழைக்கு விடுமுறை கேட்ட மாணவா்கள்: கல்லுக்குழி 49 வது வாா்டில் நடைபெற்ற பரப்புரையின்போது. அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம், அப் பகுதியிலிருந்த மாணவா்கள் சிலா் பேசுகையில், விடாது மழை பெய்தாலும் எங்கள் பள்ளிக்கு (தனியாா்) விடுமுறை விட மாட்டேன் என்கிறாா்கள். எனவே, மழை பெய்தால் விடுமுறை விடச் சொல்லுங்கள் என முறையிட்டனா். இதைக் கேட்டு சிரித்த அமைச்சா், இது படிக்கிற வயது; படிப்பைக் கவனிங்க என அறிவுரை கூறிச் சென்றாா்.

X
Dinamani
www.dinamani.com