மாடியிலிருந்து தவறி விழுந்து தனியாா் வங்கி மேலாளா் உயிரிழப்பு
மாடியிலிருந்து தவறி மின்கம்பி மீது விழுந்த தனியாா் வங்கி மேலாளா் உயிரிழந்தாா்.
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள கல்யாணசுந்தரம் நகரைச் சோ்ந்தவா் கு.மணிகண்டன் (34), தனியாா் வங்கி மேலாளா். இவரின் மனைவி மகாலட்சுமி (22). இருவரும் சமூகவலைதளம் மூலம் பழகி இருவீட்டாா் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனா்.
மணிகண்டன் தனது திருமண செலவுக்கும், வீட்டைப் புதுப்பிப்பதற்கும் வங்கியில் கடன் வாங்கியிருந்ததாகவும், கடந்த சில மாதங்களாக கடனுக்கான மாதத் தவணையை செலுத்த முடியாமல் திணறிவந்தாகவும் கூறப்படுகிறது. மேலும், கடன் பிரச்னையால் குடும்பத்தையும் நடத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்த மணிகண்டன் மாடியிலிருந்து தவறி மின்கம்பி மீது விழுந்துள்ளாா். இதையடுத்து, வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் மணிகண்டனின் மனைவி மகாலட்சுமி சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
