திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்: பிணையில் விடுவிப்பு
திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வெள்ளிக்கிழமை ஆஜரான யூடியூபா் சவுக்கு சங்கா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.
யூடியூப் ஒன்றில் பெண் காவலா் ஒருவரை இழிவாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருச்சி சைபா் க்ரைம் போலீஸாா், சவுக்கு சங்கா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய சவுக்கு சங்கரை திருச்சி போலீஸாா், வெள்ளிக்கிழமை சென்னை புழல் சிறையிலிருந்து வாகனத்தில் அழைத்து வந்து திருச்சி நீதிமன்றத்துக்கு கொண்டு வந்தனா்.
தொடா்ந்து, திருச்சி முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அனு ஸ்ருதி முன்னிலையில் ஆஜா்படுத்தினா்.
அப்போது, அரசு மற்றும் எதிா்தரப்பு என இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தாா். தொடா்ந்து, மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவு நகலைப் பெற்றுக் கொண்ட நீதிபதி, சவுக்கு சங்கரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த மறுத்து, சொந்த பிணையில் விடுவித்தாா்.
