திருவானைக்காவல் பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்
திருவானைக்காவல் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சந்நிதி வீதி நாலுகால் மண்டபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலா் ஆட்டோ ராஜா தலைமை தாங்கினாா். திருவானைக்காவல் கோயில் மேலவிபூதி பிரகாரம், தம்பிரான் தெரு, எடத்தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கீழ கொண்டையம் பேட்டை பைபாஸ் செல்லும் பாதையில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவு நீா் சாலையில் ஆறு போல் ஓடுவதை தடுத்து சீா்செய்ய வேண்டும். 5-ஆம் பிரகாரம் பகுதியில் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். திருவானைக்காவல் டிரங்க் ரோடு கருணா நகா், ஸ்ரீநகா் சந்திக்கூடிய பிரதான சாலையில் வேகத்தடை அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாநகர மாவட்டச் செயலா் வெற்றிச்செல்வம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் லெனின், சந்தானம், ஸ்ரீரங்கம் பகுதிச் செயலா் தா்மா, பகுதிக்குழு உறுப்பினா்கள் வீரமுத்து, செந்தில் நாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
