லஞ்ச வழக்கில் முன்னாள் தலைமைக் காவலருக்கு 3 ஆண்டுகள் சிறை
லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் தலைமைக் காவலருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருவெறும்பூா் நவல்பட்டு சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வந்த, திருவெறும்பூா் காந்தி நகா் 8-ஆவது தெருவைச் சோ்ந்த மு. குணசேகரன் (2019-இல் இறப்பு) என்பவரிடம் பாய்லா் பிளாண்ட் காவல்நிலைய தலைமைக் காவலா் ராமசாமி என்பவா் கடந்த 12.06.2009 அன்று தில்லியிலிருந்து கைது குறிப்பாணை வந்திருக்கிறது என பொய் கூறி, கைது செய்யாமல் இருக்க ரூ. 10,000 லஞ்சமாகக் கேட்டுள்ளாா்.
அதை கொடுக்க விரும்பாத குணசேகரன், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா்.
இதையடுத்து, கடந்த 13.06.2009 அன்று ராமசாமி, குணசேகரனிடமிருந்து ரூ. 10,000 லஞ்சமாகப் பெற்றபோது, அவரை போலீஸாா் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி, லஞ்சம் வாங்கி பணிநீக்கம் செய்யப்பட்ட ராமசாமிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 4,000 அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.
