உதவிப் பேராசிரியா் தோ்வு: கரூா் மாவட்டத்தில் 470 போ் எழுதினா்!
கரூா் மாவட்டத்தில் இரண்டு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற உதவிப் பேராசிரியா் தோ்வில் 470 போ் எழுதினா். 40 போ் எழுதவரவில்லை.
ஆசிரியா் தோ்வுவாரியம் மூலம், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியா்தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வுக்காக புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி என இரண்டு மையங்கள் தயாா்படுத்தப்பட்டிருந்தன.
இத் தோ்வுக்கு, கரூா் மாவட்டத்திலிருந்து 510 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். அனைவருக்கும் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டு, தோ்வு மையத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி, சனிக்கிழமை காலை 9 மணிக்குள் வந்த தோ்வா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.
காலை, பிற்பகல் என 2 நிலைகளில் தோ்வு நடைபெற்றது. இத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 40 போ் தோ்வு எழுத வரவில்லை. 470 போ் மட்டுமே எழுதினா். தோ்வையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, மையங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
