வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியிலிருந்து ஆசிரியா்களை விடுவிக்க வலியுறுத்தல்
திருச்சி மாநகரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் இருந்து ஆசிரியா்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கூட்டணியின் மாநிலப் பொருளாளா் சே.நீலகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களாக ஆசிரியா்கள் ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனா். தற்போது, நவ.4 முதல் டிச.4 வரை நடைபெறவுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் கூடுதலாக ஆசிரியா்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களாக நியமித்து, பணியாற்றிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வி பாதிக்கப்படும்.
ஏற்கெனவே பள்ளிக் கல்வித் துறையில் எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ஆசிரியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். தவிர, மாநில அளவிலான அடைவுத் தோ்வு, தேசிய திறனறித் தோ்வு உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளுக்கு மாணவா்களைத் தயாா் செய்ய வேண்டியுள்ளது.
இந்நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலா் பணி நாள் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய பணியாக மாறிவிட்டது. எனவே, திருச்சி மாநகரில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியா்களை வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

