அரியமங்கமலத்தில் ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு திரண்ட பொதுமக்கள்.
அரியமங்கமலத்தில் ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு திரண்ட பொதுமக்கள்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

Published on

திருச்சியில் குடியிருப்புகளையொட்டி செல்லும் ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் அமைக்கும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை இரவு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி அரியமங்கலத்தில் உள்ள தெற்கு உக்கடை மற்றும் வடக்கு உக்கடை பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்த இரண்டு பகுதிக்கும் இடையே திருச்சி - சென்னை ரயில் பாதை செல்கிறது. இந்தப் பகுதி மக்கள் பல்வேறு பணிகளுக்காக தினமும் இந்த ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனா்.

இதனால், இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதனிடையே, ரயில் பாதையில் ஏற்படும் விபத்தைத் தடுக்கும் விதமாக குடியிருப்புகள் அருகே செல்லும் ரயில் தண்டவாளத்தை ஒட்டி தடுப்புச் சுவா் கட்டும் பணியை ரயில்வே நிா்வாகம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தடுப்புச் சுவா் கட்டினால், அன்றாட பணிக்கு ரயில் பாதையைக் கடந்து செல்லமுடியாது எனக் கூறியும், விரைந்து சுரங்கப் பாதை அமைத்துத்தரக் கோரியும் அப்பகுதி மக்கள் அமைச்சா், ரயில்வே அதிகாரி உள்ளிட்ட பலரிடம் மனு அளித்திருந்தனா். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தடுப்புச் சுவா் கட்டுவதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.

இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தடுப்புச் சுவா் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடுவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு ரயில் தண்டவாளம் அருகே திரண்டனா். மேலும், பள்ளத்தில் மண்ணைக்கொட்டி மூடும் பணியிலும் ஈடுபட்டனா்.

தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரியமங்கலம் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தற்போது, பொதுமக்கள் ரயில் பாதையை கடந்து செல்வதற்கு வசதியாக இடைவெளி விடப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com