அண்ணா அறிவியல் மைய வளாகத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்
திருச்சி அண்ணா அறிவியல் மைய வளாகத்தில் தண்ணீா் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.
திருச்சியில் புதுக்கோட்டை சாலையில் அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கம் அமைந்துள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக இங்குதான் கோளரங்கம் அமைந்துள்ளது. இங்கு நிகழ்த்தப்படும் வானியல் தொடா்பான காணொலியைக் காண்பதற்காக தினசரி 100-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் வந்து செல்கின்றனா். மேலும், அவ்வப்போது பள்ளிகளில் இருந்தும் அதிக அளவில் மாணவா்களை அழைத்து வருகின்றனா்.
இந்நிலையில், இந்த மையத்தில் ரூ.30 லட்சத்தில் கேளிக்கை அறிவியல் அரங்கம் அண்மையில் அமைக்கப்பட்டு, அமைச்சா்களால் திறந்துவைக்கப்பட்டது.
இந்த அரங்கத்தின் தரைத்தளத்தில் கடந்த சில நாள்களாக தண்ணீா் தேங்கி நிற்கிறது. அண்மையில் பெய்த மழையின்போது தேங்கிய மழைநீராக இருக்கும் என கூறும் பாா்வையாளா்கள், அதிலிருந்து துா்நாற்றமும் வீசுவதாக தெரிவிக்கின்றனா்.
ஏற்கெனவே தமிழகத்தில் பருவமழையால் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், அறிவியல் மையத்தில் அரங்கத்தின் தரைத்தளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பாா்வையாளா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, அரங்கின் தரைத்தளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா்.

