திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் பயன்பாடின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள பள்ளி மாணவா்களுக்கான நடமாடும் ஆலோசனை மைய வாகனம்.
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் பயன்பாடின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள பள்ளி மாணவா்களுக்கான நடமாடும் ஆலோசனை மைய வாகனம்.

மாணவா்களுக்கான நடமாடும் ஆலோசனை மையத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்

Published on

திருச்சியில் செயல்படாமல் முடங்கியிருக்கும் பள்ளி மாணவா்களுக்கான நடமாடும் ஆலோசனை மையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கல்வியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு

உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கும் வகையில் தமிழகத்தில் நடமாடும் ஆலோசனை மையம் கடந்த 2013-14 ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தொடங்கப்பட்டது.

இந்த நடமாடும் ஆலோசனை மையத்தில் ஒரு உளவியல் ஆலோசகா் மற்றும் ஒரு உதவியாளா் நியமிக்கப்பட்டிருந்தனா். இவா்கள் வாகனத்தில் பள்ளிகளுக்குச் சென்று மாணவா்களிடம் பேசி அவா்களின் பிரச்னைகள், சந்தேகங்கள், அச்சம் உள்ளிட்டவற்றுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தனா். இதன்மூலம் மாணவா்களுக்கு ஒரு தெளிவு கிடைத்து படிப்பிலும் ஆா்வம் ஏற்பட வாய்ப்பாக இருந்தது.

இந்நிலையில், கரோனா பெருந்தொற்று பரவலின்போது நிறுத்தப்பட்ட இந்த நடமாடும் ஆலோசனை மையம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

திருச்சி மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் 3 மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். இவா்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் உளவியல் ஆலோசனை வழங்கியிருந்தால் தற்கொலை வரை சென்றிருக்கமாட்டாா்கள் என்பது கல்வியாளா்களின் கருத்தாக உள்ளது.

மாணவா்களின் நலன் கருதி நடமாடும் ஆலோசனை மையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கல்வியாளா்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

அரசிடமே முடிவு: இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணபிரியாவிடம் கேட்டபோது, இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து எங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. இத்திட்டத்துக்கான வாகனத்தைக்கூட அண்மையில் பழுதுபாா்த்து வைத்துள்ளோம். திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com