மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 149 சிறாா்கள் பங்கேற்றனா்
திருச்சி உறையூா் எஸ்.எம். மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை இணைந்து நடத்திய இந்த முகாமை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இரா. ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.
இதில், 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவச் சான்றிதழ்கள் வழங்குதல், உதவித் தொகை வழங்குதல், உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீடு நடத்தப்பட்டது.
முகாமில் 149 குழந்தைகள் கலந்து கொண்டனா். இதில் 42 குழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றும், 18 குழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டையும், 127 பேருக்கு உதவி உபகரணங்கள் வழங்கவும், 15 பேருக்கு முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டையும், 16 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கவும் தோ்வு செய்யப்பட்டனா்.
