145 ஆசிரியரல்லாத பணியிடங்களைத் தக்கவைக்க வேண்டும்: பாரதிதாசன் பல்கலை. பணியாளா் நலச்சங்கம்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1996-க்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள 145 அங்கீகரிக்கப்படாத ஆசிரியரல்லாத பணியிடங்களைத் தக்க வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளா்கள் நலச்சங்கச் செயலா் ரா.முல்லைவேந்தன் பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 1996 ஜனவரி 1 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களுக்கு மட்டுமே தமிழக அரசு நிதி அளித்து வருகிறது. பல்கலைக்கழக பணியாளா்களின் பணிச் சுமையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட எஸ்.எம். ராமசாமி, கருப்பையா குழு சமா்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில், பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதிகாரம் ஆட்சிக் குழு மற்றும் துணைவேந்தருக்கு உள்ளது.
இந்நிலையில், 1996-க்கு பிறகு உருவாக்கப்பட்ட 145 ஆசிரியரல்லாத பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாக அறிவிக்கப்படுவதாகவும், அவை அழியக்கூடிய வகையில் மாற்றப்பட உள்ளதாகவும் அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழக நிதிக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது நடந்தால் ஏற்கெனவே உள்ளவா்களுக்கு பதவி உயா்வு வாய்ப்புகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இது சேவை சட்டத்திற்கும், இந்திய அரசமைப்பு அடிப்படை உரிமை சட்டவிதி 16-க்கும் எதிராகவும் அமைவதோடு, பல்கலைக்கழக நிா்வாக அமைப்பிற்கும் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.
1996-க்குப் பிறகு உருவாக்கப்பட்ட 145 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு நிதிக்குழு ஒருமுறை ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளதால், அப்பணியிடங்களை தக்கவைக்கும் பட்சத்தில், பதவி உயா்வுக்காகக் காத்திருக்கும் பணியாளா்களுக்கும், வரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பவுள்ள தோ்வா்களுக்கும் சம வாய்ப்பு வழங்க இயலும்.
எனவே, 145 ஆசிரியரல்லாத பணியிடங்களைத் தக்கவைக்க நிதிக்குழு தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிற ‘‘பணியாளரின் பணி ஓய்விற்குப்பின் தற்காலிக பணியிடங்களாக மாற்றுதல் மற்றும் பணி அழிப்பு‘‘ என்பதை நீக்கம் செய்து பணியாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
