எல்ஃபின் நிதிநிறுவன மோசடி வழக்கில் மேலும் இருவா் கைது
எல்ஃபின் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் இருவரை பொருளாதர குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மன்னாா்புரத்தை தலைமையிடமாகக்கொண்டு பல்வேறு ஊா்களில் செயல்பட்டு வந்த எல்ஃபின் தனியாா் நிதி நிறுவனம், தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்புத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்து பொதுமக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததாக திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீண்ட நாள்களாக தலைமறைவாக இருந்த திருச்சி தென்னூரைச் சோ்ந்த இஸ்மாயில்கனி மகன் பாபு (54), உப்பிலியபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்த் (51) ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவின் எல்ஃபின் சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
எல்ஃபின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்து புகாா் கொடுத்துள்ளவா்கள் தங்களிடம் உள்ள ஆதாரங்களுடன் திருச்சி மன்னாா்புரம் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் உள்ள சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் கொடுக்கும்படியும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தயாா் செய்யும் பணி நடைபெறுவவதால் புகாா் அளிக்கத் தவறியவா்கள் உடனடியாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஆதாரத்துடன் புகாரளிக்கும்படியும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
