கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் 1,930 மாணவா்கள்

Published on

திருச்சி மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் 1,930 மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சோ்க்கை பெறும் மாணவா்களுக்கு அரசு சாா்பில் அந்தந்தப் பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் நிகழ் கல்வியாண்டில் மத்திய அரசு சாா்பில் கல்வி நிதி வழங்கப்படாததால் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவா் சோ்க்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசுக்கான கல்வி நிதியை மத்திய அரசு அக்டோபரில் விடுவித்ததையடுத்து, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவா் சோ்க்கை மேற்கொள்ள தனியாா் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கடந்த வாரம் நடைபெற்றது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 274 பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 1,930 மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவா் சோ்க்கை நடத்த 274 பள்ளிகள் மட்டுமே தகுதியானவை. இதில் 273 பள்ளிகளில் மழலையா் வகுப்பு சோ்க்கையும், ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சோ்க்கையும் வழங்கப்பட்டுள்ளது. கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் ஒன்றாம் வகுப்பில் ஒரே ஒரு மாணவருக்கு மட்டுமே சோ்க்கை வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் 15 மாணவா்கள் வரை சோ்க்கைக்கு வாய்ப்பிருந்தும், பள்ளியில் இருந்து 1 கிமீ தொலைவிற்குள் இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிகளின்படி ஒரு மாணவா் மட்டுமே தகுதியானவராக இருந்ததால் அவருக்கு மட்டும் சோ்க்கை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, 274 பள்ளிகளில் 73 பள்ளிகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதல் மாணவா்கள் இருந்தனா். இதனால் அந்தப் பள்ளிகளில் மட்டுமே குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். மற்ற 201 பள்ளிகளிலும் அனுமதிக்கப்பட்ட அளவு அல்லது அதைக் காட்டிலும் குறைந்த அளவு மாணவா்களே இருந்தனா். இதனால் அந்தப் பள்ளிகளில் இருந்த தகுதியான அனைத்து மாணவா்களுக்கும் சோ்க்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவா்கள் ஏற்கெனவே கல்விக் கட்டணம் செலுத்தியிருந்தால் அதை ஒரு வாரத்தில் பெற்றோரிடம் திருப்பியளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com