திருச்சியில் மருத்துவா் வீட்டில் 8 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் அங்கு பணியாற்றி வந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி புத்தூா் ஆஃபிஸா் காலனியைச் சோ்ந்தவா் பொ.பாலாஜி (30), மருத்துவா். இவா், தனியாா் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிறாா். உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்து வரும் இவரது தந்தையை கவனித்துக்கொள்வதற்காக ராம்ஜி நகா் புங்கனூரைச் சோ்ந்த சன்னாசி மகன் பனையாண்டியன் (28) என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலாஜி நியமித்திருந்தாா்.
இந்நிலையில், அவரது வீட்டில் வைத்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, 3 பவுன் வளையல், 2 பவுன் மோதிரம் ஆகிய 8 பவுன் தங்க நகைகள் கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி திருட்டுப்போனது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பாலாஜி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், மருத்துவா் வீட்டில் 8 பவுன் தங்க நகைகளைத் திருடியது அவரது வீட்டில் பணியாற்றி வந்த பனையாண்டியன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.