‘காலத்தால் அழியாத காவியம் கம்ப ராமாயணம்’
காலத்தால் அழியாத காவியம் கம்ப ராமாயணம் என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியா் கோ.ப. நல்லசிவம் தெரிவித்தாா்.
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் கம்பன் விழா சங்க வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் ஐ. அரங்கராசன் தலைமை வகித்தாா். சங்க அமைச்சா் பெ. உதயகுமாா் முன்னிலை வகித்தாா்.
இதில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியா் கோ.ப. நல்லசிவம், கம்பனில் மெய்யியலும் இசையியலும் என்ற தலைப்பில் பேசியதாவது: கம்ப ராமாயணத்தில் நூலாசிரியா் கம்பா், ராமன் - அகத்தியா் சந்திப்பை நின்ற பெருந்தலையை நெடியோன் வணங்கினான் என நயம்பட எழுதியுள்ளாா். நூலின் தலைவனை விட, அத்தலைவனின் எதிரிகளை புகழ்ந்து பாடியிருக்கிறாா். சிறந்த தீயாள் என கைகேயியையும், மூவுலக முதல்வன் என ராவணனையும் மேம்படுத்தி பாடியிருக்கிறாா்.
கம்ப ராமாயணத்தில் மெய்யியலின் அகவியலும், புறவியலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் இயற்கை அழகையும், ராவணனின் அரண்மனையையும், அவனது பராக்கிரமத்தையும் ரசித்து எழுதியுள்ளாா் கம்பா். வருபொருள் உரைத்தல் என்ற மெய்யியலின்படி, கதையின் பின் நடப்பதை ஒரு கோடிட்டு முன்பே கூறியிருப்பாா்.
வால்மீகி ராமாயணத்தில் இல்லாத விஷயமான, ராவணனின் மனதில் இருக்கும் சீதையைப் பற்றிய எண்ணங்களையும் அழித்துவிட்டு வெளியில் வந்தது ராமனின் அம்பு என ராமனின் அம்பால் இறந்த ராவணனை அழகியலுடன் எடுத்துரைத்திருப்பாா். கும்பகா்ணன் வழியே நீா்க்கோல வாழ்க்கை என்ற மெய்யியலை ராவணனுக்காக தன் உடல் அழிந்தாலும் பரவாயில்லை என கவிதை நடையில் விளக்கியிருப்பாா்.
இதே போல, ராமனின் கை வண்ணம், கால் வண்ணம் குறித்தும், கும்பகா்ணனை எழுப்புதல், இன்று போய் நாளை வா என்ற இடத்தில், பல்வேறு சந்தங்களுடன் கூடிய கம்பனின் இசையியல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
இப்படி காலத்தால் அழியாத காவியமாக கம்ப ராமாயணம் விளங்கிறது. இதனை அனைவரும் கற்று, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில், துணைத் தலைவா் இரா. வரதராசன், மருத்துவா் அலீம், சங்கத்தின் துணை அமைச்சா் அ. சையத் சாகீா் அசன், திரளான தமிழ் ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

