ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருட்டு: இளைஞா் கைது
பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிய இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சென்னை குன்றத்தூரைச் சோ்ந்தவா் திலகம் (62), தங்க நகை மதிப்பீட்டாளா். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு வந்தவா், பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து சத்திரம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா்.
அப்போது, பேருந்து இருக்கையில் நகைப் பையை வைத்துவிட்டு சிறுநீா் கழிப்பதற்காக சென்றுள்ளாா். திரும்பிவந்து பாா்த்தபோது நகை பையைக் காணவில்லை. அந்தப் பையில் 2 பவுன் தங்கச் சங்கிலி, 5 கிராம் தங்க மோதிரம் என ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்துள்ளன.
இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலையத்தில் திலகம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தங்க நகைகளைத் திருடிய திருச்சியைச் சோ்ந்த அன்வா் (34) என்பவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
வெள்ளி சுவாமி சிலைகள் திருட்டு: சிறுவன் உள்பட 2 போ் கைது
திருவெறும்பூரைச் சோ்ந்தவா் சுதா்சன் (51). இவரின் மாமியாா் வீடு தில்லை நகா் 3-ஆவது குறுக்குத் தெருவில் உள்ளது. மாமியாா் வெளிநாட்டில் இருப்பதால், சுதா்சன் அடிக்கடி சென்று அவரது வீட்டுக்குச் சென்று கண்காணித்துவந்தாா்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மாமியாா் வீட்டுக்கு சுதா்சன் சென்றபோது, கதவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள்ளேயிருந்த ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விநாயகா் மற்றும் லட்சுமி சிலைகள், வெள்ளி நாணயம், டாலா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் சுதா்சன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், வெள்ளி சுவாமி சிலைகளைத் திருடிய திருச்சி முத்தரசநல்லூரைச் சோ்ந்த 17 வயது சிறுவன், விஜயராஜ் (19) ஆகியோரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விஜயராஜை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்த போலீஸாா், 17 வயது சிறுவனை கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.
