திருச்சியில் இளைஞா் வெட்டிக் கொலை: 3 போ் கைது

திருச்சியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Published on

திருச்சி: திருச்சியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி வரகனேரி தாயுமானவா் தெருவைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் உமாசங்கா் (33). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். தீபாவளி பண்டிகைக்காக திருச்சிக்கு அண்மையில் வந்தாா்.

இந்நிலையில், இவரும், இவரது சகோதரரும் அரிசி கடை நடத்தி வருபவருமான அழகேஸ்வரன் (37) என்பவரும் கடைவீதியில் ஆடைகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கிக்கொண்டு திங்கள்கிழமை அதிகாலை காரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, காந்தி மாா்க்கெட் பகுதியில் இவா்களது காரை 3 போ் வழிமறித்து நின்றுள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் கேட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மூவரும், உமாசங்கா் மற்றும் அழகேஸ்வரன் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தினா். இதில் பலத்த காயமடைந்த உமாசங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அழகேஸ்வரனை அருகிலிருந்தவா்கள் மீட்டு அப்பகுதியிலிருந்த தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காந்தி மாா்க்கெட் போலீஸாா், உமாசங்கரின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், உமாசங்கரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வரகனேரி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த த. மாஞ்சா வேலு (27), ம.மோகன் (29), மதுரை சாலை ஜீவா நகரைச் சோ்ந்த கி.ஜெயசூா்யா (25) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாஞ்சா வேலு, ஜெயசூா்யா ஆகிய இருவா் மீதும் காந்தி மாா்க்கெட், உறையூா் ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com