ரூ.14 லட்சம் மதிப்பிலான வைரங்கள் திருடிய வழக்கில் மூவா் கைது

திருச்சியில் தரப் பரிசோதனைக்கு கொண்டுவந்த ரூ.14 லட்சம் மதிப்பிலான வைரங்கள் திருட்டு வழக்கில் மதுரையைச் சோ்ந்த 3 பேரை திருச்சி போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருச்சியில் தரப் பரிசோதனைக்கு கொண்டுவந்த ரூ.14 லட்சம் மதிப்பிலான வைரங்கள் திருட்டு வழக்கில் மதுரையைச் சோ்ந்த 3 பேரை திருச்சி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை தொட்டியம் கிணறு சந்து பகுதியைச் சோ்ந்தவா் கி.செல்வராஜ் (69), வைர வியாபாரி. இவா், தன்னிடமுள்ள ரூ.14 லட்சம் மதிப்பிலான 404 வைரங்களை தரப் பரிசோதனை செய்வதற்காக திருச்சி ஜான் பாட்ஷா தெருவிலுள்ள வைர தரப் பரிசோதனை மையத்துக்கு செப்டம்பா் 29-ஆம் தேதி கொண்டுவந்துள்ளாா்.

பின்னா், தரப் பரிசோதனை செய்த வைரங்களை தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கல்யாணி கவரிங் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தில் ஏறியுள்ளாா். பேருந்து, காந்தி மாா்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது பாக்கெட்டில் வைத்திருந்த வைரங்கள் திருட்டுப்போனது தெரியவந்தது.

இதையடுத்து, பேருந்தில் இருந்து இறங்கிய செல்வராஜ், காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், மதுரையைச் சோ்ந்த வைர வியாபாரியிடம் ரூ.14 லட்சம் மதிப்பிலான 404 வைரங்களைத் திருடியது மதுரை மாவட்டம், மேலூா் பாண்டியன் நகரைச் சோ்ந்த மு.முகமது சையது இப்ராஹிம் (28), மதுரை மாவட்டம், நாகமலையைச் சோ்ந்த த.சரவணன் (32), மதுரை உத்தங்குடி டிஎம்என் நகரைச் சோ்ந்த மீ.பாண்டியன் (60) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, காந்தி மாா்க்கெட் போலீஸாா் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com