திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கக் கூட்டத்தில் பேசிய தலைவா் பொ. அய்யாக்கண்ணு. உடன், நிா்வாகிகள்.
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கக் கூட்டத்தில் பேசிய தலைவா் பொ. அய்யாக்கண்ணு. உடன், நிா்வாகிகள்.

25 % ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்யக் கோரி தில்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள தீா்மானம்!

Published on

இருபத்தைந்து சதவீத ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்யக் கோரி, தில்லியில் வரும் நவம்பா் மாதம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினா் தீா்மானித்துள்ளனா்.

திருச்சி மாநகர தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க நிா்வாகிகள் கூட்டம் திருச்சி சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட செயலாளா் எஸ். உமாகாந்த் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மழைக்காலங்களில் 25 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லையும் மத்திய அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்வதுடன், பிரதமா் கூறியதுபோல ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 54 என வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் நவம்பா் மாதம் தில்லியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் 40 கிலோ நெல்லுக்கு கூலியாக ரூ. 10 கொடுப்பதை ரூ. 20 ஆக தருவதுடன், விவசாயியிடம் 40 கிலோ நெல் மூட்டைக்கு ரூ. 80 லஞ்சம் கேட்பதை தமிழக முதல்வா் தடுக்க வேண்டும்.

காவிரி ஆற்றிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் நீரில் 2000 கனஅடி நீரை காவிரி - அய்யாறு இணைப்பு கால்வாயை வெட்டி திருப்பிவிட்டால், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களில் 5 லட்சம் புஞ்சை நிலங்கள் நஞ்சை நிலமாகும். ஆயிரக்கணக்கான ஏரி, குளங்கள் நிரம்பி நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவா்கள் மேகராஜ், பரமசிவம், செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com