திருச்சி ஆட்சியரகத்தில் பெண் உள்பட இருவா் தீக்குளிக்க முயற்சி
திருச்சி ஆட்சியரகத்தில் காா் ஓட்டுநா், அழகு நிலைய பெண் உரிமையாளா் ஆகிய இருவா் தீக்குளிக்க முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் வே. சரவணன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், அன்பில் பொய்யாமொழி நினைவு சுற்றுலா வாகன ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் சங்கத்தின் செயலாளரான திருச்சி விமான நிலையப் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (35) என்பவா் திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இவரைப் போலீஸாா் தடுத்து, அவா் மீது தண்ணீா் ஊற்றி ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்தனா்.
விசாரணையில், விமான நிலைய வளாகத்தில் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியாா் நிறுவனத்தினா் வாடகை காா்களை அனுமதிக்க அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாகவும் விமான நிலையம் உள்ளே பயணிகளை ஏற்ற அனுமதி கோரி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. தொடா்ந்து அவரை போலீஸாா், விசாரணைக்காக திருச்சி விமான நிலைய காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
அழகு நிலைய உரிமையாளா்...: மனு அளிக்க வந்த கே.கே. நகா் எல்ஐசி காலனியைச் சோ்ந்த தமிழ்செல்வனின் மனைவியும், சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருபவருமான தேவி (40) என்பவா் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அவரைப் போலீஸாா், தண்ணீா் ஊற்றி தடுத்து, ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்தனா்.
விசாரணையில், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதியில் கட்டட உரிமையாளா் முன்தொகை செலுத்தி, மாத வாடகை செலுத்தி வந்துள்ளாா். குத்தகை காலம் இருக்கும் நிலையில், முன்னறிவிப்பின்றி கடையை அவா் காலி செய்ய வற்புறுத்தியதுடன், திடீரென கடையை இடித்து, அதிலிருந்த பொருள்களை எடுத்துச் சென்றுவிட்டு, முன்பணத்தையும் கொடுக்காமல் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடா்பாக, தேவி காவல்துறையிடம் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை மீட்டு, விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

