மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘போக்ஸோ’ கைதி உயிரிழப்பு
‘போக்ஸோ’ வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த கைதி ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா பொய்காயலூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (65). இவரை, கரூா் நகரப் போலீஸாா் கடந்த 2023 மே 9-ஆம் தேதி ‘போக்ஸோ’ வழக்கில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
அங்கு, அவருக்கு கடந்த அக்டோபா் 24-ஆம் தேதி உயர்ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிறை நிா்வாகத்தினா் சோ்த்தனா்.
இந்நிலையில், கணேஷ்குமாா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி விவேக் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
