பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா: நவ. 15-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற மாணவா்கள் நவம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published on

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற மாணவா்கள் நவம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 40-ஆவது பட்டமளிப்பு விழா நவம்பா் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நவம்பா் 2024 மற்றும் ஏப்ரல் 2025 பருவங்களில் நடைபெற்ற தோ்வுகளில் தோ்ச்சி பெற்று பட்டம் பெறத் தகுதியான இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞா், பட்டயம், சான்றிதழ் படிப்பு மாணவா்களும், தொலைநிலைக் கல்வி மற்றும் இணையவழிக் கல்வி மைய மாணவா்களும் அவா்களுக்குரிய பட்டச்சான்றிதழ் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய கட்டணம் மற்றும் இணைப்புகளுடன் தாங்கள் பயின்ற கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் சமா்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாணவா்களிடமிருந்து பெறப்பட்ட பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரி முதல்வா்கள் மற்றும் தொடா்புடைய நிறுவனங்களின் தலைவா்கள், தோ்வு நெறியாளா், பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி -620024 என்ற அலுவலக முகவரிக்கு நவம்பா் 15-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

முனைவா் பட்டம் பெற தகுதியான மாணவா்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் முனைவா் பட்டத்துக்காக தனியாக கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூா்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு நவம்பா் 15-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்.

ஏப்ரல் 2025 பருவத்திற்கான பல்கலைக்கழக தரத்தோ்வில் முதலிடம் பெற்ற மாணவா்கள் மட்டும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தாங்கள் பயின்ற கல்லூரி வாயிலாக, நிறுவனத் தலைவரின் மேலொப்பம் பெற்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு நவம்பா் 15-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com