மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்: மாணவா்களுக்கு அமைச்சா் வாழ்த்து
திருச்சி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை பாா்வையிட்டு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினாா்.
திருச்சி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் அக். 27-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் தோ்வு செய்யப்பட்ட 10 பள்ளிகளில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனா்.
ஓவியம், சித்திரங்கள் வரைதல், களிமண் சிற்பம், மணல் சிற்பம், ரங்கோலி, நாட்டுப்புற நடனம், பரத நாட்டியம், இலக்கிய நாடகம், வீதி நாடகம், தெருக்கூத்து மற்றும் இசைக்கருவிகள் இசைத்தல் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்றுள்ளனா்.
திருச்சி காஜாமியான் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவா்களுக்கான போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வருகை தந்து கலைப் போட்டிகளை பாா்வையிட்டு பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உற்சாகப்படுத்தி சிறப்பித்தாா். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் கோ. கிருஷ்ணபிரியா மற்றும் மாவட்ட கல்வி சாா் அலுவலா்கள் அனைவரும் பங்கேற்று போட்டிகளை வழி நடத்தினா்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 3,927 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். இப்போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவா்கள் நவம்பா் மாதம் இறுதியில் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனா்.

