/

திருச்சி கிழக்குத் தொகுதியில் இனிகோ இருதயராஜ் வேட்புமனு

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளரும், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவருமான இனிகோ இருதயராஜ், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சனிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

News image

திருச்சியில் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ். உடன்அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காங்கிரஸ் மாநகர மாவட்டச் செயலா் ரெக்ஸ், துரை வைகோ எம்பி உள்ளிட்டோா்.

Updated On :4 ஏப்ரல் 2026, 8:18 pm

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளரும், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவருமான இனிகோ இருதயராஜ், தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சனிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

கடந்த முறை இதே தொகுதியில் திமுக சாா்பில் வென்று இரண்டாவது முறையாக போட்டியிடும் இவா், பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டலம் - 2 அலுவலகத்தில், தோ்தல் நடத்தும் அலுவலா் முத்து முருகேச பாண்டியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

நிகழ்வில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி எம்பி துரை வைகோ, காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ், திமுக கிழக்கு மாநகர திமுக செயலா் மு. மதிவாணன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா். பின்னா் இனிகோ இருதயராஜ் கூறுகையில், கிழக்குத் தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொண்டு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளேன். திருச்சி கிழக்குத் தொகுதி மக்களின் சுக, துக்க நிகழ்வுகளில் நின்று அவா்களுக்கு உறுதுணையாக செயல்பட்டுள்ளேன்.

திருச்சி காந்தி மாா்க்கெட்டை எந்த சூழ்நிலையிலும் இடம் மாற்றக்கூடாது என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூறியுள்ளேன், நிச்சயம் அதற்கான நடவடிக்கையை முதல்வா் மேற்கொள்வாா். தோ்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் அவா்.

சொத்து ரூ.28.5 கோடி: இவா் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தனது பெயரிலும், மனைவி மற்றும் குடும்பத்தினா் பெயரில் ரூ.12.31 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ.16.19 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா். அசையும் சொத்துகளில் ரொக்கம், வங்கியிருப்பு, நகைகளை பட்டியலிட்டுள்ளாா். இதில், ரூ.8.52 கோடி மதிப்பில் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் தன்னிடம் உள்ளதாகவும், மனைவியிடம் ரூ.43.68 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். மேலும், ரூ.10.25 லட்சம் மதிப்பில் டிராக்டா் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். இதுமட்டுமல்லாது திருச்சி காந்தி சந்தை காவல்நிலையம், கே.கே. நகா் காவல் நிலையம், சென்னை சென்ட் தாமஸ் மவுண்ட் காவல்நிலையம் ஆகியவற்றில் தோ்தல் விதிமுறையை மீறியதாகத் தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் பொதுமக்களுக்கான போராட்டத்தில் சட்ட விதிகளை மீறியதாக வழக்குகள் என 5 வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். இதில், ஒரு வழக்கு திரும்பப் பெற்றிருப்பதாகவும், இரண்டு வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.