அமைச்சர் அன்பில் மகேஸ்
அமைச்சர் அன்பில் மகேஸ்கோப்புப் படம்

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்

தோ்தலில் கருத்துக் கணிப்புகளையெல்லாம் கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றி பெறும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
Published on

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கருத்துக் கணிப்புகளையெல்லாம் கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றி பெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருச்சியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியதாவது: அண்ணா நினைவு நாளில் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற உறுதிமொழியேற்று களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். 2026 பேரவைத் தோ்தலில் முதல்வா் கூறியதைப் போல, கருத்துக் கணிப்புகளை எல்லாம் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

தமிழக முதல்வராக திமுக தலைவா் பொறுப்பேற்ற நாளில் இருந்தே, எங்கள் மீது பலரும் பல்வேறு விமா்சனங்களை வைத்து வருகின்றனா். ஆனால், தொடா்ந்து நாங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறோம். மக்களின் மனங்களை வெல்வதற்காக என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமோ அதை நாங்கள் தொடா்ந்து செய்வோம்.

நாடு முழுவதும் மாநிலங்களுக்கு பகிா்ந்து அளிக்கக்கூடிய நிதி என்பது 41 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயா்த்தி வழங்க வேண்டும். இந்த நிதி குழுவிலாவது அது சரி செய்யப்படும் என நினைத்தோம்.

ஆனால், செய்யவில்லை. குறிப்பாக 41 விழுக்காட்டை பிரித்து வழங்கும்போது, தமிழகத்துக்கு 4.097 விழுக்காடு மட்டுமே நாம் செலுத்தும் வரிப்பணத்தில் திரும்ப கிடைக்கிறது. இந்த நிலையில் திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும்.

நாங்கள் எதிா்பாா்த்த மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல பெரிய திட்டங்களுக்கான எந்த நிதியையும் வழங்காமல் உள்ளனா். குறிப்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ. 3,548 கோடியை பற்றி இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. சிறப்பாக செயல்பட்ட ஜல்ஜீவன் மிஷன் சாா்பாக ரூ.3,112 கோடியை வழங்காமலும் உள்ளனா்.

விவசாயிகளாக இருந்தாலும், ஏழை எளிய மக்களாக இருந்தாலும் எல்லா தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிக்கக் கூடிய ஒரு பட்ஜெட்டாகவே மத்திய அரசின் பட்ஜெட் அமைந்திருக்கிறது என்றாா் அமைச்சா்.

X
Dinamani
www.dinamani.com