

திருச்சி - தஞ்சை சாலையில் பால்பண்ணை முதல் காந்தி சந்தை வரை சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.
திருச்சி மாநகராட்சியின் முக்கியப் பகுதியாகவும், திருச்சி - தஞ்சை சாலையின் முக்கிய இடமாகவும் பால்பண்ணை பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் ஆய்வு செய்ததைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் பால்பண்ணை பகுதியில் கனரக வாகனங்கள் செல்லத் தடை விதித்தாா். இதைத் தொடா்ந்து போக்குவரத்துத் துறையினா் பால்பண்ணை பகுதி வழியாக வரும் கனரக வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து, திருப்பி அனுப்பி வருகின்றனா்.
இந்நிலையில் பால்பண்ணை முதல் காந்தி சந்தை வரையிலான 1.6 கி.மீ. நீள சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் செவ்வாய்க்கிழமை அகற்றினா். மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் கண்ணன் உத்தரவுப்படி, உதவி கோட்டப் பொறியாளா் புகழேந்தி தலைமையில் உதவிப் பொறியாளா் கௌதம் மற்றும் ஊழியா்கள், போலீஸ் பாதுகாப்புடன் சாலையோரத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கடைகளின் முன்பகுதி, ஷீட்டுகள், தள்ளுவண்டிகள் என சுமாா் 200 கடைகளை அகற்றினா்.