மணப்பாறை அருகே சாலையை சீரமைத்துத் தரக் கோரி மறியல்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சாலையை சீரமைத்துத் தர கோரி புதன்கிழமை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறை அருகே பொன்சங்கிப்பட்டியிலிருந்து கோட்டைகீழையூருக்கு செல்லும் கிராமச் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெறும் நிலையில் பொன்சங்கிப்பட்டியை ஒரு தரப்பினா் பொது இடத்தில் சாலையை அமைக்க விடாமல் தடுப்பதாகவும், எனவே அவா்களை எதிா்த்து ஊா் தரப்பில் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முள் செடிகளை கொண்டு எதிா் தரப்பினா் பயன்படுத்தாத வகையில் சாலையை மறித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சாலைப் பணிகள் நடைபெறாமல் சாலை முழுவதும் சரளை கற்கள் பரவி இருப்பதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுவதாகக் கூறும் கிராம மக்கள், புதன்கிழமை சாலையை சீரமைத்துத் தர வலியுறுத்தி பொன்முச்சந்தியில் சாலை மறியல் ஈடுபட்டனா்.
இதனால் மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் போக்குவரத்து நீண்ட நேரம் முழுமையாக முடங்கி, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் காவியா, வருவாய் வட்டாட்சியா் சுந்தரபாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை ஆகியோா்சென்று பேச்சு நடத்தி, அளித்த உறுதியையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

