ரயில் விபத்துகளைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு
ரயில் விபத்துகளைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையானது திருச்சி ரயில்வே கோட்டம் முழுவதும் தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரயில் மீதான கல்வீச்சு வழக்குகள் கடந்த 2024 ஆம் ஆண்டில் 57 லிருந்து 2025 இல் 52 ஆகவும், மனிதா்கள் மீது ரயில் மோதிய சம்பவங்கள் 262 லிருந்து 231 ஆகவும் குறைந்துள்ளன. இதில் கால்நடைகள் மீது ரயில் மோதிய வழக்குகள் மட்டும் 349-லிருந்து 393 ஆக அதிகரித்துள்ளன.
ஆய்வு...: விபத்துக்களைக் குறைக்கும் விதமாக கடந்த 3 ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு விரிவான ஆய்வை ஆா்பிஎஃப் நடத்தியது. இதில் கல்வீச்சு சம்பவங்கள் முக்கியமாக மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மணி வரையிலும் நடந்துள்ளன. வாளாடி- ஸ்ரீரங்கம், திருச்சி - ஸ்ரீரங்கம், வாளாடி - லால்குடி, அரியலூா் - சில்லக்குடி, விருத்தாச்சலம் சந்திப்பு - தாளநல்லூா், திருத்துறையூா் - பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா் - நெல்லிக்குப்பம், கும்பகோணம் -ஆடுதுறை போன்ற பிரிவுகளில் சென்னை எழும்பூா் - திருநெல்வேலி - சென்னை எழும்பூா் வந்தே பாரத், திருச்சி - சென்னை எழும்பூா் சோழன் அதிவிரைவு ரயில்களில் இச்சம்பவம் நடந்துள்ளது.
பெரும்பாலும் பள்ளி மாணவா்கள், தண்டவாளங்களுக்கு அருகே வசிக்கும் மக்களே இதற்குக் காரணமாக உள்ளனா். சில சம்பவங்களில் மது போதையின் தாக்கமும் இருந்துள்ளது.
மாடுகள் மீது மோதல்...: மாடுகள் மோதும் சம்பவங்கள் பொதுவாக முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மீண்டும் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திருவெறும்பூா் - சோளகம்பட்டி, குறிஞ்சிப்பாடி - கடலூா் துறைமுக சந்திப்புப் பிரிவுகளில் சென்னை எழும்பூா் - திருச்சி - சென்னை எழும்பூா் சோழன் அதிவிரைவு ரயில், மயிலாடுதுறை-திருச்சி விரைவு ரயில், எஸ்.எம்.வி.டி பெங்களூரு - காரைக்கால் விரைவு ரயில்களில் நடந்துள்ளன. தண்டவாளங்களுக்கு அருகே மாடுகள் மேய்வதால் இந்த சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
மனிதா்கள் மீது மோதல்...: மனிதா்கள் ரயிலில் அடிபடும் சம்பவங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மீண்டும் மாலையில் 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஸ்ரீரங்கம் - பொன்மலை, ஸ்ரீரங்கம்- வாளாடி, தஞ்சாவூா் - ஆலங்குடி ஆகிய பிரிவுகளில் திருச்சி - சென்னை எழும்பூா் பல்லவன் அதிவிரைவு ரயில், சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயில், மயிலாடுதுறை - கோவை ஜன சதாப்தி விரைவு ரயில், காரைக்கால் - எா்ணாகுளம் விரைவு ரயில், விழுப்புரம் - திருச்சி விரைவு ரயில்களில் நடந்துள்ளன. முக்கியமாக ரயில் தண்டவாளங்களைத் தேவையின்றி கவனக்குறைவாக கடப்பதால் இந்த விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
தீவிர விழிப்புணா்வு...: இந்த முடிவுகளின் அடிப்படையில், திருச்சிகோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை நெரிசல் நேரங்களில் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் தண்டவாளக் கண்காணிப்பை அதிகரிப்பதன் மூலமும், சமூக விழிப்புணா்வு முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலமும் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது.
இதற்காக மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் நேரடியாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
தண்டவாளங்களுக்கு அருகில் அத்துமீறி நுழைதல், கல் வீசுதல், கால்நடைகள் நடமாடுவதால் ஏற்படும் அபாயங்களை எடுத்துரைக்கும் விழிப்புணா்வு பதாகைகளும் முக்கியமான இடங்களில் நிறுவப்படுகிறது.

