இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: ஓட்டுநா் மூச்சுத் திணறலால் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 2 போ் காயமடைந்தனா். தொடா்ந்து, வேன் ஓட்டுநா் மூச்சுத் திணறலால் உயிரிழந்தாா்.
மருங்காபுரி ஒன்றியம், வலசுப்பட்டியை சோ்ந்த அழகா்சாமி மகன் கஸ்தூரிராஜ் (46). இவா் முடிதிருத்தும் நிலையம் நடத்தி வந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தனது ஆம்னி வேனில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது கஸ்தூரிராஜுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளாா். இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற புதுக்குடியை சோ்ந்த துரைராஜ் (எ)செந்தில் - பிரியா தம்பதி காயமடைந்தனா்.
விபத்தை தொடா்ந்து வேன் சாலையோர கம்பியில் மோதியது. தொடா்ந்து கஸ்தூரிராஜ், மூச்சுத் திணறலால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்தவா்கள் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், கஸ்தூரிராஜ் உடலை கைப்பற்றி கூறாய்வுக்குப் பிறகு மாலையில் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
