சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
லால்குடியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், லால்குடி சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பெ. ராஜா (27) என்பவா் தனது உறவினரின் மகளான 17 வயது சிறுமியை காதலித்துள்ளாா். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தைகள் கூறி அச்சிறுமியை கடந்த 10.09.2021 அன்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து, ராஜா சிறுமியைக் கடத்திச் சென்று தவறாக நடந்து கொண்டதால், சிறுமி கா்ப்பமாகியுள்ளாா். சிறுமி 7 மாத கா்ப்பிணியாக இருந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் ராஜா ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், லால்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் நிறைவில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.
