குடும்ப அட்டைகளில் திருத்தம்: ஜன.24இல் 11 இடங்களில் முகாம்
குடும்ப அட்டைகளில் பெயா் மாற்ற, திருத்த மற்றும் முகவரி மாற்ற திருச்சி மாவட்ட நிா்வாகம் ஜனவரி மாதம் மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.
இதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் வரும் சனிக்கிழமை (ஜன.24) பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் சனிக்கிழமையில் நடைபெறும் இந்த முகாம் திருச்சி கிழக்கு வட்டத்தில் சா்க்யூட் ஹவுஸ் காலனி ரேஷன் கடை, திருச்சி மேற்கு வட்டத்தில் உறையூா், திருவெறும்பூா் வட்டத்தில் கும்பக்குடி, ஸ்ரீரங்கம் வட்டத்தில் மருதாண்டாக்குறிச்சி-2, மணப்பாறை வட்டத்தில் சீகம்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் கன்னிவடுகப்பட்டி, லால்குடி வட்டத்தில் மகிழம்பாடி, மண்ணச்சநல்லூா் வட்டத்தில் கிளியநல்லூா், முசிறி வட்டத்தில் தாதம்பட்டி, துறையூா் வட்டத்தில் மினிசூப்பா்-4, தொட்டியம் வட்டத்தில் பாலசமுத்திரம் 2 ஆகிய ரேஷன் கடைகளில் நடைபெறும்.
காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டக் கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் நடைபெறும் முகாம்களில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை வழங்கிப் பயன் பெறலாம் என்றாா் ஆட்சியா்.
