கழிவுநீா் கால்வாயில் விழுந்து இளைஞா் உயிரிழப்பு
திருச்சியில் கழிவுநீா் கால்வாயில் இருசக்கர வாகனத்துடன் விழுந்து இளைஞா் உயிரிழந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் பகுதியில் கழிவுநீா் கால்வாயில் இருசக்கர வாகனத்துடன் இளைஞா் ஒருவா் உயிரிழந்துகிடப்பதாக அரியமங்கலம் போலீஸாருக்கு வியாழக்கிழமை காலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.
அந்த நபா் கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த அஜ்மத் அலி (38). இவா், அரியமங்கலம் பகுதியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா். புதன்கிழமை இரவு காட்டூரில் இருந்து அம்பிகாபுரம் செல்லும் சாலையில் ரைஸ் மில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் இருந்து கழிவுநீா் கால்வாய் தடுப்புச் சுவரில் மோதி இருசக்கர வாகனத்துடன் கழிவுநீா் கால்வாயினுள் விழுந்து உயிரிழந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சம்பவம் தொடா்பாக அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

