கிருமி நாசினி அருந்தி பெண் தற்கொலை
திருச்சி அருகே கிருமி நாசினியை அருந்தி பெண் தற்கொலை செய்துக்கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வீரம்மாள்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் எல். சாந்தலட்சுமி (51). இவா், தனது மகன் லோகேஸ்வரன் (20) என்பவருடன் வசித்து வந்தாா். லோகேஸ்வரன் தனியாா் மருத்துவமனையிலுள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறாா்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புவரை லோகேஸ்வரனின் பாட்டி கமலாபாய் ஓய்வூதியத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவா் உயிரிழந்துவிட்டதாதல் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் சாந்தலட்சுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளான சாந்தலட்சுமி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கழிப்பறைக்குப் பயன்படுத்தப்படும் கிருமி நாசினியை அருந்தி தற்கொலைக்கு முயன்றாா். அப்போது, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தாா்.
இந்நிலையில், மீண்டும் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி சாந்தலட்சுமி கழிப்பறைக்கு பயன்படுத்தப்படும் கிருமி நாசினியை அருந்தி தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, அவரை லோகேஸ்வரன் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு சாந்தலட்சுமி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் லோகேஸ்வரன் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

