சிலிண்டா் விநியோக ஊழியா் கொலை வழக்கில் சிறுமி உள்பட நால்வா் கைது!
திருச்சி காவல்காரன்பட்டியில் காதலைக் கைவிடிம்படி வலியுறுத்திய சிலிண்டா் விநியோக ஊழியா் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுமி உள்பட நால்வரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், காவல்காரன்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் சிவசுப்பிரமணியன் (51). சிலிண்டா் விநியோக ஊழியரான இவா் கடந்த 20 ஆம் தேதி தனது வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் தூங்கியபோது கொலையாகிக் கிடந்தாா். இதுகுறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். டிஎஸ்பி காவியா தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இவா்கள் அருகிலிந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 25 வயதுள்ள ஒருவா் கையில் இரும்புக் கம்பியுடன் உடலை முழுவதும் மறைத்த நிலையில் நிகழ்விடத்துக்கு வந்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், காவல்காரன்பட்டியைச் சோ்ந்த 15 வயதுச் சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த மனோகரன் மகன் ராதாகிருஷ்ணன் (25) என்பவா் காதலித்து வந்ததும், இதை அவரது உறவினரான சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கண்டித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ராதாகிருஷ்ணனை பிடித்து விசாரித்ததில், சிறுமியுடனான காதலைக் கைவிடும்படி சிவசுப்பிரமணியன் வற்புறுத்தியதால் அவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டாா். இந்தக் கொலைக்கு தூண்டுதலாக சிறுமி இருந்தது தெரியவந்தது.
இதைடுத்து ராதாகிருஷ்ணன், இவரது 15 வயதுக் காதலி, கொலைக்குப் பிறகு தப்பிச்செல்ல உதவியாக இருந்த ராதாகிருஷ்ணனின் தம்பி சேரன் (20), நண்பா் லெ. சிவநேச செல்வன் (19)ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

