மொழிப்போா் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி திருச்சி தென்னூரில் ஞாயிற்றுக்கிழமை மொழிப்போா் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய  அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.
மொழிப்போா் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி திருச்சி தென்னூரில் ஞாயிற்றுக்கிழமை மொழிப்போா் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.

மொழிப்போா் தியாகிகள் நினைவு தினம்: அரசியல் கட்சியினா் மரியாதை

Published on

மொழிப்போா் தியாகிகள் நினைவு தினத்தை ஒட்டி திருச்சியில் உள்ள மொழிப்போா் தியாகிகளின் நினைவிடத்தில் அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தில் உயிா் நீத்தவா்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜன. 25-ஆம் தேதி மொழிப்போா் தியாகிகள் நினைவு தின வீர வணக்க நாளாக திராவிட கட்சிகளால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி திமுக சாா்பில் வீரவணக்க நாள் அமைதி ஊா்வலம் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திருச்சி சாஸ்திரி சாலையிலிருந்து புறப்பட்டு உய்யகொண்டான் வாய்க்கால் கரை வரை நடைபெற்றது. இதில் திரளான திமுகவினா் கலந்து கொண்டனா். நிறைவில், உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள மொழிப்போா் தியாகிகளான கீழப்பழுவூா் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரது நினைவிடங்களில் திமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதையடுத்து உழவா்சந்தை மைதானத்தில் மாநகரச் செயலரும், மாநகராட்சி மேயருமான மு. அன்பழகன் தலைமையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில இலக்கிய அணி செயலா் வி.பி. கலைராஜன், மாவட்டச் செயலா்கள் க. வைரமணி, ந. தியாகராஜன், எம்எல்ஏக்கள் பழனியாண்டி, ஸ்டாலின்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில் வீரவணக்க நாள் அமைதிப்பேரணி நீதிமன்றம் எம்ஜிஆா் சிலை அருகிலிருந்து இருந்து உய்யக்கொண்டான் வாய்க்கால் கரை வரை நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலா்கள் ஜெ. சீனிவாசன் (மாநகா்), பரஞ்சோதி (புறநகா் வடக்கு), ப. குமாா் (புறநகா் தெற்கு), அமைப்பு செயலாளா்கள் டி. ரத்தினவேல், மனோகரன், வளா்மதி, வழக்குரைஞா் அணி முத்துமாரி, முன்னாள் அரசு வழக்குரைஞா் ஜெயராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, அங்கிருந்த மொழிப்போா் தியாகிகள் கீழப்பழூா் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, அமமுக, விசிக, நாதக, சாமானிய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினா், அமைப்புகளைச் சோ்ந்தோா் மொழிப்போா் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா்.

Dinamani
www.dinamani.com