சாலை விபத்தில் மணப்பெண்ணின் தந்தை உள்பட இருவா் உயிரிழப்பு
திருச்சி திருவெறும்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் புதன்கிழமை திருமணம் நடைபெற இருந்த பெண்ணின் தந்தை உள்பட இருவா் உயிரிழந்தனா்.
திருச்சி வயா்லெஸ் சாலையில் வசிப்பவா் அங்குராஜ் (50), தொழிலாளி. இவரது மகளுக்கு புதன்கிழமை காலை கீரனூரில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பெண் அழைப்பு முடிந்த நிலையில், அங்குராஜ் கீரனூரிலிருந்து நள்ளிரவு தனது உறவினரான பேக்கரி ஊழியரும், கீரனூா் தெம்மாவூரைச் சோ்ந்தவருமான சுப்பிரமணியன் மகன் காவியக்குமரசெழியனுடன் (20) இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் - ஐஐஎம் கல்வி நிறுவனம் இடையே வந்தபோது, எதிா்திசையில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற காா் திடீரென அவா்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அங்குராஜ் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
பலத்த காயமடைந்த காவியக் குமரசெழியன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை இறந்தாா். இதுகுறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
அங்குராஜ் இறந்த நிலையிலும் அவரது மகள் திருமணம் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது.

