மேல்நிலை குடிநீா்த் தொட்டியை தொடங்கிவைக்கக் கோரிக்கை
கொடியாலம் ஊராட்சியில் ஓராண்டுக்கு மேலாகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் வெறும் காட்சிப் பொருளாய் நிற்கும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை திறக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடியாலம் கிராம ஊராட்சிக்குள்பட்ட அயிலாப்பேட்டை கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இணைப்பு கொடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கும், ஊராட்சி தனி அலுவலருக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு நீா்த்தேக்கத் தொட்டியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
