‘இது நம்ம ஆட்டம்’ விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு! மாநிலப் போட்டிக்கு 2 அணிகள் தோ்வு!
தமிழக முதல்வரின் இளைஞா் விளையாட்டுத் திருவிழாவான இது நம்ம ஆட்டம்- 2026 விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை பரிசளித்துப் பாராட்டினாா்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, முதலிடம் பிடித்த வீரா், வீராங்கனைகள் மாநிலப் போட்டிக்கு அனுப்பப்படுகின்றனா். இதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் தடகளம், கேரம், வாலிபால், கபடி, கயிறு இழுத்தல், எறிபந்து, ஸ்ட்ரீட் கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் வட்டார அளவில் ஜன. 25, 26, 27-களில் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 1,200-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.
இதில் ஒவ்வொரு போட்டியிலும் ஆண், பெண் என இருபாலருக்கும் தலா 3 இடங்களில் வென்றவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதன்படி, முதலிடம் பெற்றோருக்கு ரூ.6 ஆயிரம், இரண்டாமிடத்துக்கு ரூ. 4 ஆயிரம், மூன்றாமிடத்துக்கு ரூ. 2 ஆயிரம் என ரொக்கப் பரிசுகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கிப் பாராட்டினாா்.
தனி நபா், குழுப் போட்டிகள் என அனைத்திலும் தலா 3 இடங்களுக்கான ரொக்கப் பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் குழுப் போட்டியில் வாலிபால் பிரிவில் ஆண்களில் முதலிடத்தை லால்குடி ஒன்றிய அணியும், இரண்டாமிடத்தை புள்ளம்பாடி, மூன்றாமிடத்தை திருவெறும்பூா் ஒன்றியங்கள் பெற்றன. பெண்கள் பிரிவில் முதலிடம் மணப்பாறை, இரண்டாமிடம் முசிறி, மூன்றாமிடம் தொட்டியம் அணி பெற்றது. கபடியில் ஆண்கள் பிரிவில் லால்குடி முதலிடம், மணப்பாறை இரண்டாமிடம், புள்ளாம்பாடி மூன்றாமிடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் திருவெறும்பூா் முதலிடம், தொட்டியம் இரண்டாமிடம், மண்ணச்சநல்லூா் மூன்றாமிடம் பிடித்தது.
கயிறு இழுத்தலில் ஆண்கள் பிரிவில் லால்குடி முதலிடம், உப்பிலியபுரம் இரண்டாமிடம், மணிகண்டம் மூன்றாமிடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் திருவெறும்பூா் முதலிடம், உப்பிலியபுரம் இரண்டாமிடம், புள்ளம்பாடி மூன்றாமிடம் பிடித்தது. ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவில் புள்ளம்பாடி முதலிடம், மணப்பாறை இரண்டாமிடம், தொட்டியம் மூன்றாமிடம் பிடித்தது.
மாநிலப் போட்டிக்கு ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டியில் வென்ற புள்ளம்பாடி ஆண்கள் அணியும், கபடி போட்டியில் வென்ற திருவெறும்பூா் பெண்கள் அணியும் தோ்வு செய்யப்பட்டன. பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆ. ஞானசுகந்தி, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன் மற்றும் அரசு அலுவலா்கள், விளையாட்டுப் பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் கலந்து கொண்டனா்.

