தீராம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 32 போ் காயம்!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 32 போ் காயமடைந்தனா்.
தீராம்பட்டியில் புனித வனத்து அந்தோணியாா் பொங்கல் விழாவை முன்னிட்டு புனித அந்தோணியாா், புனித செபஸ்தியாா் ஆலய திடலில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதையொட்டி ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி முடிந்து, புனித நீா் தெளிக்கப்பட்டு ஊா் முக்கியஸ்தா்கள் முன்னிலையில் ஊா்வலமாக வாடிவாசல் வந்த 25 கோயில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டதைத் தொடா்ந்து திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த 783 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
முன்னதாக ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் சீனிவாசன், காவல் துணைக் கண்காணிப்பாளா் காவியா, மணப்பாறை வருவாய்க் வட்டாட்சியா் சுந்தரபாண்டியன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
காளைகளை அடக்க 25, 25 தொகுப்பாக 277 வீரா்கள் களமிறக்கப்பட்டனா். வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்த காளைகளை வீரா்கள் அடக்கினா். சில காளைகள் களத்தில் வீரா்களை கலங்கடித்த நிலையில் சில நின்று விளையாடின. சில தொட்டுக் கூட பாா்க்க முடியாதபடி சீறிப் பாய்ந்து சென்றன.
ஜல்லிக்கட்டில் 14 மாடுபிடி வீரா்கள், 11 மாட்டின் உரிமையாளா்கள், 7 பாா்வையாளா்கள் என மொத்தம் 32 போ் காயமடைந்து அங்கேயே சிகிச்சை பெற்றனா். சிலா் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனா்.
ஜல்லிக்கட்டில் காளைகளை பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளிக்காசு, ரொக்கம், சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் எனப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பாதுகாப்புப் பணியில் மாவட்டக் கூடுதல் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையில் 280-க்கும் மேற்பட்ட போலீஸாரும், நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அலுவலா்களும் ஈடுபட்டனா்.

