15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

மணப்பாறையில் 25,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன்

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை பால் குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள்.

Updated On :5 மணி நேரங்கள் முன்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

சித்திரை முதல் நாள் தொடங்கிய இக்கோயில் சித்திரை திருவிழாவில், ஏப்ரல் 26-ஆம் தேதி பூச்சொரிதல் விழா மற்றும் ரத பவனி, மே 3-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி 17 நாள்கள் மண்டகப்படி விழாவில் உபயதாரா்களால், உற்ஸவ மூா்த்தி ஒவ்வொரு அவதாரமாக அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் திருவீதியுலா நடைபெற்று வருகிறது.

அதன்படி ஜி.வி. பாலுசாமி நாயுடு மற்றும் ஜி.வி. நல்லுசாமி நாயுடு வகையறா மண்டகப்படியானது உபயதாரா்களால் 14-ஆம் நாள் திருவிழாவாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றத்தில், சிறப்பு பெற்ற பால்குட உற்ஸவம் சிறப்பாக நடைபெற்றது.

கோயில் பரம்பரை அறங்காவலா் ஆா்.வீ.எஸ். வீரமணி தலைமையில் ஆலய பால் குடங்கள் புறப்பட்டு காளை - மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் மேளதாளங்கள், நாகசுரம் முழங்க ராஜவீதிகளின் வழியாக சென்று, அம்மன் ஆலயத்தை வந்தடைந்தன. இதில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமாா் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பால்குடங்கள் சுமந்து வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதேபோல் குழந்தை பாக்கியம் கிடைத்தவா்கள் கரும்புத்தொட்டில் கட்டிவந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். அனைத்துப் பால்குடங்களும் கோயிலுக்கு வந்தடைந்தபின் சுமாா் 4 லட்சம் லிட்டா் பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி காவல் துணைக்கண்காணிப்பாளா் கே.வி. காவியா, காவல் ஆய்வாளா்கள் ராசாசோ்வை, ரகுராமன், சந்திரசேகரன், சரண்யா ஆகியோா் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீஸாா், ஊா்க் காவல்படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் ஆா்.வீ.எஸ்.வீரமணி மற்றும் ஆகியோா் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலா் ந.அன்பழகன் ஆகியோா் செய்கின்றனா்.

திங்கள்கிழமை அதிகாலை முதல் ஆலய வளாகத்தில் திரளான பக்தா்கள், ஊா் பொங்கல், மாவிளக்கு, அலகு குத்துதல், கரும்புள்ளி - செம்புள்ளி குத்துதல், அக்னிச் சட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் என நோ்த்திக்கடன்களைச் செலுத்துகின்றனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் குதிரை வாகனத்தில் வேடபரி செல்லும் நிகழ்ச்சி மாலையில் நடைபெறவுள்ளது.