நிலப் பிரச்னையில் இருவா் தீக்குளிக்க முயற்சி

தீக்குளிக்க முயற்சி - பிரதிப் படம்
திருச்சியில் நிலப் பிரச்னையில் இருவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த ஆங்கரையைச் சோ்ந்தவா் சண்முகநாதன் (56). இவருக்கு சொந்தமான 3 நிலங்களின் பத்திரத்தை வைத்து, தில்லை நகா் 7-ஆவது குறுக்கு வீதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான ராஜாராம் (75) என்பவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 25 லட்சம் கடன் பெற்றுள்ளாா்.
கடன் பெற்ற சண்முகநாதன் அதற்கான வட்டியை முறையாக செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜாராம் நிலத்தை வேறொருவருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளாா்.
இதுகுறித்து தகவலறிந்த சண்முகநாதன், இவருடைய மைத்துநா் சரவணன் (45) ஆகிய இருவரும் திங்கள்கிழமை ராஜாராம் வீட்டுக்குச் சென்று, கடன் பெற்ற பணத்தை திருப்பித் தருவதாகத் தெரிவித்துள்ளனா்.
அப்போது, 3 இடத்தில் ஒரு இடத்தை விற்பனை செய்யவுள்ளதாக ராஜாராம் தெரிவித்துள்ளாா். இதனால், சண்முகநாதனுக்கும், ராஜாராமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தகவலறிந்த போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனா்.
அப்போது, சண்முகநாதன் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் தாங்கள் கொண்டுவந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து, போலீஸாா் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து தில்லை நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

