தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் சார்பில்சென்னை கே.கே.நகர், அயனாவரத்தில் மருத்துவக் கல்லூரிகள்

ஆம்பூர், ஜூன் 18: தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தின் சார்பில் சென்னை கே.கே. நகர், அயனாவரத்தில் அடுத்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்

ஆம்பூர், ஜூன் 18: தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தின் சார்பில் சென்னை கே.கே. நகர், அயனாவரத்தில் அடுத்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.

 ஆம்பூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தின் புதிய கட்டடத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:

 கோவையில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தின் சார்பில் துவங்கப்பட உள்ள மருத்துவக் கல்லூரிக்கான கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

 ஆம்பூரில் ரூ.1.25 கோடி செலவில் 7,760 சதுர அடி பரப்பில் மருந்தகம் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 19 ஆயிரம் காப்பீட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன் பெறுவர்.

 தமிழகத்தில் 2,363 படுக்கைகள் கொண்ட 9 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள், 184 மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 15 லட்சம் காப்பீட்டாளர்கள் உள்பட அவரது குடும்பத்தினர் 61 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

 திமுக ஆட்சியில் 400 மருத்துவர்கள், 250 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

 தமிழக தொழிலாளர் நலத்துறையின் கீழ் 16 நலவாரியங்கள் உள்ளன. நல வாரியங்களில் கடந்த 4 ஆண்டுகளில் 26.50 லட்சம் பேர் உறுப்பினர்களாகியுள்ளனர். இதில், 9.22 லட்சம் உறுப்பினர்களுக்கு ரூ.235.36 கோடி நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

 கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர்களுக்கான பிரீமியம் தொகை கடந்த ஆண்டு ரூ.370 கோடியை தமிழக அரசு செலுத்தியது.  நடப்பாண்டில் ரூ.750 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

 மாநிலம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்கள் 358 இயங்கி வருகின்றன. 21 லட்சம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளன. தற்போது 3 லட்சம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்ற ரூ.1800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன.  இதுவரை 7.5 லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார் அன்பரசன்.

 விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் செ.  ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சி. விஜயசந்திர பூஷணம் வரவேற்றார்.

 மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்குநர் புருஷோத்தம விஜயகுமார், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழக கூடுதல் ஆணையரும் மண்டல இயக்குநருமான எஸ். பரசுராமன், எம்எல்ஏக்கள் ஆர். காந்தி, ஹெச். அப்துல் பாசித், அ. சின்னசாமி,  ஆம்பூர் நகர்மன்றத் தலைவர் வாவூர் நஜீர் அஹமத், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஷீலா ராஜன், முன்னாள் எம்.பி. தி.அ.முகமது சகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com