உடும்பு கறி தின்றால் உடல் பலம் பெறுமா?

வேலூர், மார்ச் 12: உடும்பு கறியைச் சாப்பிடுவதன் மூலம் உடல் வலிமை கிடைக்கும் என்ற மாயையால், வேலூரில் உடும்புகள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. வேலூர் மாநகரைச் சுற்றிலும் உள்ள மலைக்கிராமங்களில் உடும

வேலூர், மார்ச் 12: உடும்பு கறியைச் சாப்பிடுவதன் மூலம் உடல் வலிமை கிடைக்கும் என்ற மாயையால், வேலூரில் உடும்புகள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.

வேலூர் மாநகரைச் சுற்றிலும் உள்ள மலைக்கிராமங்களில் உடும்புகள் எளிதாகப் பிடிபடுகின்றன. இவற்றைப் பிடித்து, வேலூர் நகரில் உள்ள ஹோட்டல்களுக்கு அளித்து தினசரி பணம் சம்பாதிக்கின்றனர் இளைஞர்கள்.

அப்படி கொண்டு வரப்படும் உடும்பு ஒன்றின் விலை ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உடும்புகள் வேலூர் அருகேயுள்ள பாலமதி, அமிர்தி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. ஒரு பிளேட் உடும்புக் கறி ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உடும்புக்கறிக்காகவே இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை சில குறிப்பிட்ட ஹோட்டல்களைத் தேடி வருகின்றனர். மேலும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அருகிலும் உடும்புக்கறி விற்பனை அதிகம் உள்ளது.

உடும்பு கறியை சாப்பிடுவதால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்றும், ஆண்மை பெருகும் என்றும் நம்பப்படுவதால் ஹோட்டல்களில் உடும்பு கறி விற்பனை அதிகரித்துள்ளது. இதுதவிர, மதுபானத்தில் தண்ணீரைக் கலப்பதற்குப் பதிலாக, உடும்பை அறுத்து, அதன் ரத்தத்தைக் கலந்து குடிக்கும் பழக்கமும் சிலரிடம் இருக்கிறது. இவ்வாறு குடிப்பதால், உடல் பலம் பெறும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

ஆனால், கோழி, ஆட்டு இறைச்சியைப் போல உடும்பு இறைச்சியும் சாதாரணமான ஒன்றுதான். அதற்கு என்று பிரத்யேக சக்தியை அளிக்கும் திறன் கிடையாது என்று மருத்துவர்கள் மறுக்கின்றனர்.

தவறான நம்பிக்கையால் பல்லி இனத்தைச் சேர்ந்த உடும்புகள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு உடும்பு கறி விற்பனை செய்ததாக அண்மையில் மூவரை வனத்துறையினர் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உடும்புக்கறி விற்பனையைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com